திருவள்ளூர்அடுத்த தாத்துக்கான்பேட்டை பாரதியார் தெருவைச்சேர்ந்தவர், சுசிலா (65). இவர் தனது தாய் கன்னியம்மாள் (84), மகன்கள் சீனிவாசன், பார்த்திபன், மருமகள்கள் மாலதி, ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச்சேர்ந்த கணேஷ் (32), லட்சுமி (30) தம்பதியினர், தான் கட்டுமானத்தொழில் செய்து வருவதாகவும், தங்குவதற்கு வீடு வேண்டும் என்றும் கேட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு பணிக்காக மருமகள் ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் ஆகியோர் சென்றுவிட்டனர். புதிதாக குடிவந்த அந்த தம்பதி வீட்டின் உரிமையாளரான சுசிலா உள்ளிட்ட அனைவரிடமும் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு 8 மணியளவில், சுசிலா தனக்கு பால் காய்ச்சி தருமாறு அந்த தம்பதியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த தம்பதி சுசிலா உள்ளிட்ட மற்றவர்களுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனைப்பருகிய அனைவரும் மயங்கிய நிலையில் இருக்கும்போது வீட்டிலிருந்த ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றனர்.