திருவள்ளூர்: ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்ட ரூபாய் 177 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஆயத்த பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்தப் பகுதியில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (ஆக.30) நடைபெற்றது.
இந்த தடுப்பணையால் திருவள்ளூர் மாவட்டம் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்க்கூடிய பூண்டி ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் தடைபடும் என்றும், இதனால் பொது மக்களுக்கு பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆகியவற்றை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர், திருத்தணி தொகுதி தமிழ்நாடு எல்லையான பள்ளிப்பட்டு பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த ஆர்பாட்டத்திற்கு முன்னிலை வகித்து தடுப்பணை கட்டுக் ஆந்திர அரசை எதிர்த்தும், தடுப்பணை கட்டக்கூடாது என்ற பதாகையுடன் ஊர்வலமாக தொண்டர்களுடன் நடந்து வந்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "தமிழ்நாடு அரசு உடனடியாக ஆந்திர மாநில அரசு கட்டும் தடுப்பணை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். சென்னையில் வசிக்கும் ஒரு கோடி மக்களுக்கு நீர் ஆதாராமாக இருக்கக்கூடிய பூண்டி ஏரிக்கு இந்த கொசஸ்தலை ஆற்றில் இருந்துதான் நீர் வருகிறது. இந்த கொசஸ்தலை ஆற்று தண்ணீரை தடுத்து ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,"திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கக்கூடிய கொசஸ்தலை ஆற்றுக்கு தண்ணீரானது ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையில் இருந்து வருகிறது. இந்த அணையின் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு சுமார் ரூபாய் 177 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதற்கான திட்டங்களை வகுத்து விரைவாக செயல்பாடுகளிலும் இறங்கி உள்ளனர். தமிழ்நாடு அரசு உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும். சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்றாவது ஆந்திரா அரசு கட்டி வரும் தடுப்பணையை தடுத்து நிறுத்த வேண்டும்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநில அரசுகள் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் ஆதாரங்களை தடுத்து நிறுத்தி வருவதால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். மேலும், இதற்கான செயல் திட்ட வடிவங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். நீர் நிலை செயல் திட்டத்திற்கு என்று தனி கவனத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர்க்கு அடுத்தபடியாக இந்த திருவள்ளூரில்தான் அதிகப்படியான நீர் நிலைகள் உள்ளன. எனவே, இந்த நீர் நிலைகளை பாதிக்கும் வகையில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசினை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் மூலம் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நான் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.