திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகாவிலுள்ள ராஜநகரம் காலனியில் வசிக்கும் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த நூறு பேருக்குத் தலா மூன்று சென்ட் நிலம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
1994, 2002ஆம் ஆண்டுகளில் பட்டாக்கள் வழங்கி, 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறி கிராம மக்கள், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர்.
அதில், திருத்தணி சிறப்பு தாசில்தாரர், ஆர்.கே.பேட்டை சர்வேயர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யாமல் 25 ஆண்டுகளாக அலுவலர்கள் கடமை தவறியுள்ளதாகவும், இது மனித உரிமையை மீறிய செயல் எனவும் கூறி, பாதிக்கப்பட்ட நூறு பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மூன்று மாதங்களில் நூறு பயனாளிகளுக்கும் நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யும்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தும்படி வருவாய் துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.