திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வருகின்ற 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதை ஒட்டி காவல்துறையினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்ட காவல் உதவி துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் தலைமையில் நடைபெற்ற இதில், கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து உள்ளதால் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு திறலும் மதுப் பிரியர்கள் மூலம் கரோனா நோய் தொற்று பரவாதா? என கேள்வி கேட்டனர்.
அதே சமயம் தடையை மீறி பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் 500 சிலைகள் வைக்கப்போவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
கரோனா நோய் தொற்று பரவும் என்பதால் பத்ரிநாத் கோவில் திருவிழாவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் விநாயகர் சிலைகளை வைக்கப்போவதாக பாஜகவினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.