குறுவை சாகுபடி பருவத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் சொர்ணவாரி பருவ நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இம்மாத இறுதிக்குள் (31.07.2020) அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பிரீமியம் செலுத்துவதற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கடன்பெறா விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிர் செய்யப்பட்டுள்ள மொத்த பரப்பில் 50விழுக்காடு பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சென்னை வழங்கியுள்ள அறிவுரையின் படியும், இம்மாத இறுதிவரை அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா தொற்று ஊரடங்கு உத்தரவின் படியும் விவசாயிகள் எவ்வித சிரமமுமின்றி பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தவும், பிரீமியம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன்படி 31.07.2020 வரை அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.