எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் அதற்கேற்றார்போல களத்தில் செயலாற்றி வருகின்றனர். பெரும்பாலான கட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரப்புரையைத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், திருவள்ளூரில் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கான அலுவலக திறப்பு விழா மற்றும் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி இன்று (டிச.27) நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ”தகவல் தொழில்நுட்பம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும். இப்போது அனைவரின் கைகளிலும் மொபைல் உள்ளது.
அதை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். தமிழ்நாடு அரசு முதியோர் உதவித்தொகை முதல் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வரை அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்து அதை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நல்ல திட்டங்களை நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இது குறித்து வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களிடம் சேர்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மீம்ஸ் மூலம் பரப்பிவரும் பொய் பரப்புரைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். இதை சீரிய முறையில் நீங்கள் செய்தால் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் நரசிம்மன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோயம்புத்தூர் மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரமணா, அமைப்புச் செயலாளர் ஹரி, கோவை மண்டல தொழில்நுட்ப பிரிவு தலைவர் தர்மேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மநீம கட்சி பேப்பர் லெஸ் கட்சியாக விரைவில் மாறும் - கமல்ஹாசன்