திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் பிரதான தொழிலாக நெல், வேர்க்கடலை, மல்லிகைப்பூ உள்ளிட்டவைகளை 30 ஆண்டுகளாக விவசாயிகள் பயிரிட்டுவருகின்றனர்.
இச்சூழலில் பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்திவந்த அரசுக்குச் சொந்தமான வண்டிப்பாதை நிலத்தை, எவ்வித முன்னறிவிப்புமின்றி சில அலுவலர்கள் வந்து பயிரிடப்பட்டிருந்த இடத்தை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், துணை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கண்காணிப்பில் சேதப்படுத்தியுள்ளனர்.
அதை தடுக்க முயன்ற தங்களை துணை கண்காணிப்பாளர் பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது போன்ற செயலில் ஈடுபட்ட அலுவலர்கள் மீதும், அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்த, விவசாய நிலங்களைப் மனை இடங்களாகப் போட்டு விற்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலா பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகாளித்தார்.
பொதுமக்களுடன் மனு அளிக்கவந்த பாமகவினர் தமிழ்நாடு அரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நீர்நிலைகளைப் பாதுகாத்து விவசாயத்திற்கு பல்வேறு திட்டங்களை வகுக்கும் வேளையில், இன்னும் 10 நாள்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் மூலமாக விசாரணைசெய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.