திருவள்ளூர்: சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அதன் பின் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்து துறைகளிலும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள மருந்தக உரிமையாளர்களுக்கான போதைப் தடுப்பு மருந்துகள் மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் இந்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை திருவள்ளூர் மண்டல உதவி இயக்குநர் சுடலைவேல் முருகையா, மருத்துவர்கள் கார்த்திகேயன், அஸ்வின், பவித்ரா தேவி, நலக்கல்வி அலுவலர் கணேசன், மருந்து ஆய்வாளர்கள் கும்மிடிப்பூண்டி சரகம், ஹரிகிருஷ்ணன், ஆவடி சரகம் ரூபினி, திருத்தணி சரகம் விமல், மருந்துக் கடை உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பிரீத்தி மெடிக்கல் அசோக் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மருந்து கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை மருந்துப் பொருட்கள் விற்றால் நடவடிக்கை மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மயக்கவியல் மருந்துகளை வழங்கக்கூடாது. போதை தரக்கூடிய மருந்துகளை, போதைக்கு அடிமையாக்கும் தன்மையுள்ள மருந்துகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்க கூடாது. மருத்துவரின் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வழங்கக் கூடாது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் அனைத்து மருந்தக உரிமையாளர்களும் பொது மக்களுக்கு போதை மருந்துகள் மற்றும் பொருட்களையும் வழங்கக்கூடாது என்றும், அவ்வாறு விற்பனை நடப்பது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. போதை மருந்துப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருவள்ளூரில் 31 சவரன் நகை, ரூ.30ஆயிரம் பணம் கொள்ளை... போலீசார் விசாரணை