திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாய்குமார் தனது வீட்டினருகே வசித்து வந்த தீபிகா என்ற பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த தீபிகாவின் தந்தையும் விருப்ப ஓய்வு பெற்ற தலைமைக் காவலருமான பாலகுமார் வீட்டை காலி செய்துவிட்டு திருத்தணியில் குடியேறினார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா சாய்குமாருக்கு கடந்த ஜூன் மாதம் போன் செய்து வரவழைத்து பெங்களூருக்குச் சென்று திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள தீபிகாவை அவரது தந்தை பாலகுமார் கடந்த 31ஆம் தேதி, அவரது தாயின் உடல்நிலை சரியில்லை எனக்கூறி தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு தீபிகா மறுக்கவே, கையில் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை தீபிகா, அவரது மாமியார் பாக்கியலட்சுமி, பெரிய மருமகள் திவ்யா ஆகியோர் மீது வீசிவிட்டு தீபிகாவை காரில் கடத்திச்சென்றார்.