சென்னை ஆவடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் 2,000 டன் பழங்கள் வரை சேமிக்கக்கூடிய தனியாருக்குச் சொந்தமான ராட்சத குளிர்சாதன பழக்கிடங்கு உள்ளது. இங்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை சேமித்து வைத்து பின்னர் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்நிலையில், கிடங்கில் போர்க் லிப்ட் இயந்திர வாகனத்தின் மூலம் பழங்களை அடுக்கும் பணியில் நான்கு வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பழப்பெட்டி சரிந்ததில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பல டன் கணக்கான பழ பெட்டிகள் சரிந்து விழுந்தன.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 இளைஞர்களும் கிடங்கில் சிக்கிக் கொண்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முடியாததால் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் பழங்களுக்கிடையே சிக்கிய நான்கு இளைஞர்களில் மூன்று பேரை உடனடியாக காப்பாற்றினர். மற்றொரு இளைஞரை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு பல யுத்திகளைக் கையாண்டு பத்திரமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி வட்டாட்சியர் புனிதவதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுவருகிறார்.