ஆவடி:முத்தாபுதுப்பேட்டை பகுதியில் வேணி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக மருந்துக்கடை, கிளினிக் வைத்துள்ளார் கடந்த சில மாதங்களாகப் பகுதி நேர மருத்துவர் இவர் கிளினிக் தேவைப்பட்டது. இதன் காரணமாக மருத்துவர் தேவை என ஓஎல்எக்ஸில் விளம்பரம் கொடுத்திருந்தார்.
இதைக்கண்ட ஒருவர் இவரைத் தொடர்புகொண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த ரீகன் பிரபு என்பவர் தான் ஒரு மருத்துவர் எனவும், நான் சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பகுதி நேர மருத்துவராகப் பணிபுரிந்துவருவதாகவும் கூறியுள்ளார்.
கிளினிக் உரிமையாளர் வேணி, உங்களிடம் உள்ள மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்து மருத்துவப் பணி மேற்கொள்ளலாம் என்று கூறினார். மூன்று நாள்களில் கொடுக்கிறேன் என்று அந்நபர் கூறியுள்ளார்.
பின்பு கடந்த ஒரு வாரமாக இவர் வேணி நடத்திவரும் மருந்து கிளினிக்கில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற நோயாளி கடந்த வாரம் குடல் பிரச்சினை சிகிச்சைக்காக வேணி கிளினிக்கிற்கு சென்றுள்ளார். இரண்டு நாள்கள் சிகிச்சைக்குச் சென்றுவந்துள்ளார்.
சிகிச்சையில் மயக்க ஊசி செலுத்தி தாலி திருட்டு
சம்பவத்தன்று பிரியா சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். முகத்தில் சுவாசம் அளிக்கும் உபகரணத்தை வைக்க வேண்டும் எனக் கூறி பிரியா அணிந்திருந்த தாலிச் சங்கிலியைக் கழற்ற கூறியுள்ளார். இதனை மறுக்கவே தாலியைச் சற்று உயர்த்தி காதில் மாட்டிக்கொண்டுள்ளார்.