கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பலர் வேலைவாய்ப்பை இழந்து, தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர் வங்கியில் கடன் வாங்கி, மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார். திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே சான்ட்ரோ சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி.
செம்பரம்பாக்கம் ஊராட்சி 3ஆவது வார்டு உறுப்பினரான இவர், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ திட்டமிட்டார். ஆனால், இவரிடம் போதியப் பொருளாதார வசதியில்லை.
இருப்பினும், நிவாரண பொருட்களை வழங்குவதற்காக, வங்கியில் 10 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு, ஊனமுற்றோர், நலிவடைந்தோர், விதவைகள் என, ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்து, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான நிவாரணம் பொருட்களை வழங்கிவருகிறார்.