பிரபல கடையில் எலி கடித்த பழங்களில் ஜூஸ் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு - அயப்பாக்கம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிரபல உயர் ரக ஜூஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தனது நண்பருடன் சென்று ஜூஸ் ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது பட்டர் புரூட், கிர்ணி பழம் மற்றும் கேரட் உள்ளிட்டவற்றை எலி கடித்த நிலையில் இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அதனை அகற்றாமல் கடை திறந்து 5 மணி நேரத்திற்கு மேலாகியும் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கடை ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு செய்த வாடிக்கையாளர்கள் அதனை ஆதாரமாக கொண்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆவடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகாரை பெற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பந்தப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லை என்றும், புகார் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சென்னை - திருச்சி ஹைவே ஹோட்டல்களில் அதிரடி சோதனை.. விக்கிரவாண்டியில் கெட்டுப்போன உணவுகள் பறிமுதல்!