திருவள்ளூர்:தமிழ்நாடு- ஆந்திர மாநில எல்லையான ஆரம்பாக்கத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் நரேஷ் (24). பொறியியல் பட்டதாரியான நரேஷ் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த வியாழன் நரேஷ் இரவு 9 மணி அளவில் வீடு திரும்பும்போது எளாவூரில் உள்ள எம். ஆர் தாபாவில் சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது செல்போன் சார்ஜ் இல்லாததால் தாபா கேசியரிடம் செல்போனை சார்ஜ் செய்யுமாறு கொடுத்துவிட்டு உணவருந்திய அவர், திரும்பி வந்து பார்க்கும்போது கேசியர் நரேஷின் செல்போனை ஆய்வு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த பட்டதாரி தாபா கேசியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
செல்போனை அனுமதியின்றி பயன்படுத்தியதை தட்டி கேட்டததால் இளைஞரை தாக்கிய உரிமையாளர் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் தாபா உரிமையாளர்கள் இருவர் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து நரேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த நரேஷ் இந்த தகவலை வீட்டில் சொல்லாமல் மறைத்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை வலியால் துடித்த பட்டதாரி நரேஷை தந்தை சங்கர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது மருத்துவமனை வாசலிலேயே நரேஷ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நரேஷின் தந்தை சங்கர், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக பதிவு செய்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிரேத பரிசோதனை முடிவு மற்றும் சிசிடிவி பதிவுகளை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இறப்புக்கான விவரம் கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய தாபா உரிமையாளர்கள் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் கடவு எண்ணை தர மறுத்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் நரேஷின் உறவினர்கள் உயிரிழந்த நரேஷின் உடலை வாங்க மறுத்து குற்றவாளியை கைது செய்யக்கோரி, ஆரம்பாக்கத்தில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் டிஎஸ்பி கிரியாசக்தி மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. எனினும் யாரையும் கைது செய்யாததால் ஒரு மணி நேரம் கழித்து உறவினர்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:இரண்டாம் காதலனுடன் கூட்டு சேர்ந்து முதல் காதலனை கொன்ற பெண் கைது