Student Gang-war: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன்.
இவரது மகன் குமார் சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) பி.ஏ வரலாறு முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 28) அவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை புறநகர் ரயிலில் சக நண்பர்களுடன் வந்துள்ளார்.
திருநின்றவூர் ரயில் நிலையம் வந்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் குமாரை ரயிலில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கு குமார் ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது என உருக்கமாகப் பேசி இருந்தார்.
தொடர்ந்து அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர் உடற்கூராய்விற்காக திருவள்ளூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.