தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு பரிசு... கொஞ்சம் நம்பிக்கை... சத்தமில்லாமல் ஒரு சாதனை - முனைவர் பட்ட ஆய்வு

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்.. தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்.. இப்பாடல் வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சாதிக்கத் துடிப்பவர்களுக்குச் சரியாகப் பொருந்தும். அப்படி தன் ரசனையைத் தேடித் தேடி சாதனையாக்கிய ஷர்மிளாவின் கதையிது...

achievement
achievement

By

Published : Oct 12, 2020, 4:42 PM IST

Updated : Oct 13, 2020, 7:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் தொட்டிச் செடிகள், சின்னச் சின்ன மரங்கள், புசு புசு புல்வெளியுள்ள அழகிய வீட்டில் வசிக்கும் மூன்று குழந்தைகளுடைய ஒரு சின்னக் குடும்பத்தின் மூத்த மகள் ஷர்மிளா. அப்பா உலகநாதன் விவசாயி, அம்மா அனிதா இல்லத்தரசி; ஷர்மிளா முனைவர் பட்ட ஆய்வாளர்.

சென்னை அரும்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் நுண்ணுயிரியலில் முனைவராய்வைச் செய்து வரும் ஷர்மிளாவின் பட்டம் சார்ந்த பணிகளில் ஒன்று தான் நுண்ணுயிர்களை ஆராய்வது. இளநிலை படிக்கும் போது, சின்னச் செல்களை நுண்ணோக்கியில் வைத்து, பெரிதாக்கிப் பார்க்கும் போது ஏற்பட்ட அனுபவம், அவருக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்த, அது மனதின் அடியாழத்தில் புதைந்து கொண்டது.

ஒரு பரிசு... கொஞ்சம் நம்பிக்கை... சத்தமில்லாமல் ஒரு சாதனை

இளநிலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு என, படிப்பில் நாட்கள் சென்றாலும், தான் செய்யத் துடித்த ஏதோ ஒன்றை இன்னும் செய்யவில்லையோ என்ற ஏக்கம் அவருள் தாங்கியிருக்கிறது. இனம் புரியாத அந்த ஏக்கத்தை ஷர்மிளாவுக்குச் சரியாக அடையாளம் காட்டியது, அவரது பிறந்த நாளுக்கு பெற்றோர் கொடுத்த பரிசான மைக்ரோஸ்கோப்.

கரோனா ஊரடங்கு பொது முடக்கத்தால் கல்லூரி செல்ல முடியாத ஷர்மிளாவுக்கு விடுமுறைக்கால தோழமையாகியிருக்கிறது புதிதாக அவரிடம் வந்து சேர்ந்த மைக்ரோஸ்கோப். மனதின் அடியாழத்தில் புதைந்து போன, இளநிலைக் காலத்து பரவசத்தை புதிய தோழி மீண்டும் தூண்டிவிட, சின்னச் சின்ன நுண்ணுயிர்களை மைக்ரோஸ்கோப் தோழியின் கண்கொண்டு, உருபெருக்கிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் ஷர்மிளா.

தனது மைக்ரோஸ்கோப் தோழியுடன் ஷர்மிளா

இந்தமுறை பார்ப்பதோடு திருப்தியடையாமல், தான் பார்த்ததைப் பதிவு செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். உருபெருக்கிப் பார்த்த நுண்ணுயிரிகளைத் தன் அலைப்பேசியின் உதவியுடன் படம் பிடித்து பாதுகாத்திருக்கிறார். மண், தவளை, பாம்பு தோல், பறவைகளின் இறகு, தாவர செல்கள், தண்ணீர் என இதுவரை ஷர்மிளா தேடித் தேடி உருபெருக்கிப் பார்த்து, படம் பிடித்த நுண்ணுயிர் மாதிரிகள் மட்டும் 17 ஆயிரத்து 17.

ஷர்மிளாவின் இந்தப் புதிய தேடலை பாராட்டி, அதிக அளவிலான நுண்ணுயிர்களின் மாதிரிப் படங்கள் சேகரித்து வைத்திருப்பவர் என "நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்" நிறுவனம், புதிய உலக சாதனையாக அங்கிகரித்து சான்றிதழும், பதக்கமும் வழங்கி அவரைக் கௌரவித்திருக்கிறது.

படமும் பரவசமும்

தன் புதிய தேடல் குறித்து ஷர்மிளா, "என் முனைவர் பட்ட ஆய்வில் புதிதாக ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். பெற்றோர் என் பிறந்த நாளுக்கு மைக்ரோஸ்கோப் பரிசளித்தார்கள். அதை வைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நுண்ணுயிர்களின் மாதிரி படங்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.

மண், தவளை, பாம்பு தோல், பாக்டீரீயா, பூஞ்சை, பறவைகளின் இறகு, தாவர செல்கள் என 17 ஆயிரத்து 17 நுண்ணுயிர் மாதிரி படங்கள் சேகரித்துள்ளேன். ஒரு லட்சம் நுண்ணுயிர் மாதிரிப் படங்களை சேகரிக்க வேண்டும் என்று ஆசை. என்னுடைய முயற்சியை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்துள்ளது" என்றார்.

எங்கள் மகள் ஒரு உலக சாதனை செய்திருக்கிறாள். அவளுக்கு நாங்கள் ஒரு மைக்ரோஸ்கோப் வாங்கிக் கொடுத்தோம். அதில் அவள் ஆர்வமாக வேலை செய்தாள். அவளின் ஆர்வத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நாங்கள் அவளின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டோம். அவள் எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறாள். மகளுக்கு தோள் கொடுத்த கதையை மிகையில்லாமல் கவிதையாக்கி முடித்தார் ஷர்மிளாவின் தந்தை உலகநாதன்.

பெற்றோர் தந்த பரிசும் , மகள் மீதான அவர்களின் நம்பிக்கையும், சத்தமில்லாமல் அவளை சாதனை மாணவியாக்கியிருக்கிறது.

வாழ்த்துகள் ஷர்மிளா...

Last Updated : Oct 13, 2020, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details