தமிழ்நாட்டில் நவம்பர் ஆறாம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் ஆறாம் தேதிவரை திருச்செந்தூர் கோயில் வரையிலாக வேல் யாத்திரை நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்தார். வேல் யாத்திரை நடத்தினால் மதக்கலவரம் ஏற்படும் என பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இருப்பினும் இன்று(நவ.6) வேல் யாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் திருத்தணியில் குவிந்தனர். பாஜகவினரின் வேல் யாத்திரையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட நான்கு மாவட்டங்களில் 1,500க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 12 மணிக்கு எல்.முருகன் மலைக் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்கினார். அரசின் தடையை மீறி எல். முருகன் சென்னை பைபாஸ் சாலைக்கு வந்து வேல் யாத்திரையை தொடங்கினார். அவருடன் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.