திருவள்ளூர்:நெற்குன்றத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமேஸ் லால் என்பவர் 25 ஆண்டுகளாக நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடை மூலம் சென்னை மற்றும் அதன் புறநகரைச் சுற்றியுள்ள சிறிய சிறிய நகைக் கடைக்கு நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம், வெங்கல், பூச்சி அத்திப்பட்டு, தாமரைப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறிய சிறிய நகைக்கடைக்கும் வாரம் ஒரு முறை, தனது நகைக்கடையில் இருந்து நகைகளை கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் விற்பனை செய்தும், பணத்தை வசூலித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி தனது நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோகன்லால் மற்றும் காலூராம் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் 1,400 கிராம் கொண்ட மூக்குத்தி, கம்மல், வளையல் மற்றும் சரடு போன்ற 30க்கும் மேற்பட்ட வகையான தங்க நகைகளை நெற்குன்றம் கடையில் இருந்து விற்பனைக்காக வழக்கமாகக் கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் நெற்குன்றத்தில் இருந்து பாக்கம் கிராமத்தில் உள்ள நகைக்கடைக்கு நகையை கொடுத்து விட்டு வசூலித்த ரொக்கப் பணமான 1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 1.4 கிலோ நகைகளை எடுத்துக் கொண்டு செங்குன்றம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் பூச்சி அத்திப்பட்டு - காரணிபேட்டை இடையே சென்றபோது, இவர்களது பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த 3 பேர், காலூராம் இடமிருந்து நகையைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், காலூராம் கொடுக்க மறுக்கவே, பட்டாக்கத்தியைக் கொண்டு அவரை வெட்டி விட்டு, 1.4 கிலோ நகை மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராமேஸ்லால், வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.