திருவள்ளூர் மாவட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில், அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 633 பேர், முதியோர் தொகை பெறுவதற்காக கோரிக்கை மனுக்கள் வழங்கியிருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் முதியோர்கள், ஊனமுற்றவர்கள், கணவனை இழந்தவர்கள் உள்ளிட்ட பயனாளிகள் 43 பேருக்கு முதற்கட்டமாக உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராசன் வழங்கினார்.
இதில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மகேஷ், மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ரவி உள்ளிட்ட அரசு அலுவளர்கள் கலந்து கொண்டனர்.