திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் சமீபகாலமாக பூட்டிய வீடுகளைக் குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, பொதட்டூர்பேட்டையில் மதுபானக் கடையின் பீரோவை உடைத்து, அதில் பணம் இல்லாததை அறிந்து மது பாட்டில்களை அள்ளிச் சென்ற சம்பவமும் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி, வெளிகரம், சாமி நாயுடு கண்டிகை, பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட சில பொருள்கள் சிலர் திருடி சென்றனர். இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று (மார்ச்.20) இரவு ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்தர் குமார் தலைமையிலான காவலர்கள், நகர சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்ற மூன்று நபர்களை மடக்கி விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதால் சந்தேகமடைந்து, அவர்களது வாகனத்தை காவலர்கள் சோதனை செய்தனர்.
இச்சோதனையில் எவ்வித ஆவணங்களுமின்றி நகை உள்ளிட்ட பொருள்களையும், கத்திகளையும் அவர்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்நபர்கள், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் மதராசி (எ) ராஜா, சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த அண்ணாமலை, குடியாத்தத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பது தெரிய வந்தது.
இவர்கள் ஊசிமணி வியாபாரம் செய்து வரும் மதராசி (எ) ராஜா என்பவருடன் இணைந்து, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், ராஜா ஊசிமணி விற்பது போன்று, பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தங்களுக்கு தகவல் சொல்லியதாகவும், பின்னர் இரவு நேரங்களில் சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட பொருள்களை திருடியதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை, புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த ஐந்து சவரன் நகை, விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், கேமரா, பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.