திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பு கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் பெரியகுப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயன்ற உதயகுமார், தங்கமணி, பொன்னையன் ஆகியோர் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், நான்கரை கிலோ எடையும், ஆளுயர அளவுக்கும் உள்ள இந்த மண்ணுளி பாம்பை 2 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணுளி பாம்பை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது இதுகுறித்து வனச்சரகர் கூறுகையில், " இந்த மண்ணுளி பாம்பில் மருத்துவ குணம் இருப்பதாக தவறான தகவலை பரப்பி அதன் மூலம் மோசடியில் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது, மீண்டும் மோசடி கும்பல் வேலையை காட்ட தொடங்கியுள்ளனர். இதில், மருத்துவ குணம் இல்லை என்பதை சுகாதாரத் துறையினர் உறுதி செய்துள்ளனர். பொது மக்கள் யாரும் இதை நம்பி ஏமாற வேண்டாம். பிடிபட்ட பாம்புகள் எல்லாம் சின்னதாக இருந்த நிலையில், தற்போது பிடிபட்டுள்ள பாம்பு பெரியதாக இருக்கிறது. சட்டவிரோத வழக்கில் கோவையைச் சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்: காதலி, மாமியாரைக் கொன்று இளைஞர் தற்கொலை!