திருவள்ளூர்:காஷ்மீரில் பணிக்கு சென்றுகொண்டிருந்த துணை ராணுவப்படை வீரர்கள் (சி.ஆர்.பி.எஃப்) வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டு வீரர் மணிபாரதி(38) உயிரிழந்தார். இவர் திருத்தணி அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அரசு சார்பில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் இறந்த மணிபாரதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் துணை ராணுவப்படை சார்பில் டி.ஐ.ஜி. தினகரன், எஸ்.பி சுரேஷ்குமார், காவல் துறை சார்பில் ஏ.எஸ்.பி சாய் பிரணீத், மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் சத்தியா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.