2019-ஆம் ஆண்டு தேசிய பெண் குழந்தைகள் ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி மத்திய அரசு பெண் பிள்ளைகளை பாதுகாப்போம், அவர்களுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் வடிவம் - 12 ஆயிரத்து சதுர அடியில் உலக சாதனை! இதனை முன்னிட்டு சென்னையை அடுத்த ஆவடி அரசினர் பெண்கள் பள்ளியில், இந்தியாவிலேயே முதல் முறையாக 12 ஆயிரத்து சதுர அடியில் 2000 மாணவிகள் ’பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்’ வடிவம் (logo) போன்று அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உலக சாதனைக்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர் "திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் பிள்ளைகளின் பிறப்பு விழுக்காடு குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மக்களிடம் ஏற்படுத்திவருகிறோம். மாணவிகளாகிய நீங்களும் 18 வயதிற்கு பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதே போன்று பெண் கரு கொலை செய்வது சட்டப்படி குற்றம். எனவே மாணவிகள் இதுபோன்று நிகழ்வுகள் ஏற்படாத வகையில் பெரியவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார். இதனையடுத்து விழாவின் இறுதியில் பெண் குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.