திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள நேதாஜி நகர் 18வது வார்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியான இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (மே.1) கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்ற இரண்டு பேர் கழிவுநீர் தொட்டியில் உள்ளே இருந்தபோது, விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து வரும் நிரந்தர துப்புரவுப் பணியாளர்களான பட்டலால் பகதூர் தெருவில் வசிக்கும் கோவிந்தன்(45) மற்றும் தற்காலிகப் பணியாளரான சுப்புராயலு(45) ஆகியோர் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.