திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியில் கஞ்சா கடத்திவருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்ன மாத்தூர் சாலை பேருந்து நிலையம் பின்புறத்தில் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை அழைத்து காவலர்கள் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலைத் தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சிறிதளவு கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்ததில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பிச்சி ரெட்டி தோப்பு நாயுடு பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் குமார் என்பதும், ஆந்திர மாநிலத்திலிருந்து விற்பனைக்காக கஞ்சா கடத்திவந்ததும் தெரியவந்தது.
மேலும், அவரிடமிருந்து 13 கிலோ எடை கொண்ட கஞ்சாவினை பறிமுதல்செய்து, அவர் மீது மாதவரம் பால்பண்ணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது - லோடு ஆட்டோ பறிமுதல்!