நெல்லை அருகே கிணற்றில் விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு - கிணற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர் மீட்பு
திருநெல்வேலி: கிணற்றில் விழுந்த இளைஞரை காவல் துறையினரும் தீயணைப்பு துறையினரும் உயிருடன் மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (20) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வேலையை செய்துவருகிறார். இதற்காக இவர்கள் லாரியில் ஊர் ஊராக சுற்றி பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே லொச்சிப்பட்டி பகுதியில் காளிமுத்து, அவரது நண்பர்கள் வீடு வீடாக சென்று செப்டிக் டேங்க் சுத்தம் செய்வது குறித்த நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
அப்போது காளிமுத்து ஒரு வீட்டின் அருகே இருந்த கிணற்றுக்குள் கால் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் காளிமுத்து உயிருக்கு போராடியுள்ளார். சிறிது நேரம் கழித்து கிணற்றின் உரிமையாளர் அந்த வழியாக வந்து பார்த்தபோது உள்ளே ஒருவரின் அலறல் சத்தம் கேட்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து தேவர்குளம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றுக்குள் விழுந்த இளைஞரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த காளிமுத்துவை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று கிணற்றுக்குள் தத்தளித்த இளைஞரை மீட்ட காவல் துறை, தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.