திருநெல்வேலி: குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் குமார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த நான்காம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார்.
காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், தனது நண்பர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது தனது வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்.
திருடிய பைக்கை தள்ளி சென்ற இளைஞர் அதில் சம்பவத்தன்று இரவு 12 மணிக்கு நடந்து வந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை அவர் பார்த்ததில், திருடிய நபர் மேலப்பாளையம் சந்தை வரை இருசக்கர வாகனத்தை தள்ளி சென்றார். அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம் உள்ள கொக்கிரகுளம் பகுதி வரை இருசக்கர வாகனத்தை தள்ளி சென்றார் என்பது தெரியவந்தது.
நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடும் கும்பல், நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், தனிநபராக சென்று இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் இளைஞரின் காணொலி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டியுக்கில் வந்து பல்சர் பைக்கை திருடி சென்ற இளைஞர்கள்