திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கீழ ஏர்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பவானி. இவர், அம்பை தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். பவானி அதிகமாக சமூக வலைதளம் பயன்படுத்தும் பழக்கமுடையவர். அந்த வகையில் பேஸ்புக் வழியாக சங்கரலிங்கம் என்பவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவர் ஆவார். இதற்கிடையில் சங்கரலிங்கம் பவானியை தொடர்புகொண்டு, தான் இந்தியா வர வேண்டும் என்றும் அதற்கு தனக்கு பணம் தேவைப்படுகிறது என்று கோரியுள்ளார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த, தனது மற்றொருபேஸ்புக்நண்பரான ரெங்கராஜன் (29) என்பவரை அணுகி பவானி பணம் கேட்டுள்ளார். அதற்கு ரெங்கராஜன், "என்னிடம் பணம் இல்லை, உனது நகைகளைக் கொடு, அவற்றை அடமானம் வைத்து பணம் திரட்டித் தருகிறேன்" என்று கூறியுள்ளார். இதை நம்பி, ரெங்கராஜனிடம் சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 60 கிராம் எடை கொண்ட தனது தங்க செயினை பவானி கொடுத்துள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி பணத்தையும் கொடுக்காமல் நகையையும் திருப்பிக் கொடுக்காமல் ரெங்கராஜன் ஏமாற்றி வந்துள்ளார்.