தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு விதி மீறல்: காவலர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல்!

By

Published : May 23, 2021, 9:27 AM IST

ஊரடங்கு விதி மீறல் தொடர்பாக விசாரணை நடத்திய காவலர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட

காவலர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல்
காவலர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல்

திருநெல்வேலி: திசையன்விளை காவல் உதவி ஆய்வாளர் கதிரேசன் மற்றும் காவலர்கள் தங்கராஜ், அண்ணாமலை ஆகியோர் வெள்ளிக்கிழமை(மே.21) ஆர்.சி. நந்தன்குளம் கிராமம் வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பொறியியல் பட்டதாரியான இளைஞர் கிங்ஸ்லி (25), புனித ராயப்பர் ஆலயம் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரருகே நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். இதைக் கண்ட காவல்துறையினர் ஊரடங்கு நேரத்தில், இது போன்று வெளியில் நிற்பது தவறு எனக் கூறி கண்டித்துள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கிங்ஸ்லியை காவல் நிலையத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கிங்ஸ்லி மறுக்கவே காவலர்கள் அவரது தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர்.

காவலர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல்

இதைக் கண்ட கிங்ஸ்லியின் பாட்டியும், முன்னாள் கவுன்சிலருமான தெரசம்மாள் கூச்சலிடவே, ஊர் மக்கள் ஒன்று கூடியுள்ளனர். இளைஞர் மீது நடத்திய தாக்குதலுக்கு எதிராக ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் சம்பவம் போல இன்னொரு சம்பவ நடக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் காவல் துறையினர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, கிங்ஸ்லி ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் கேட்டபோது, நேற்று முன்தினம் (மே.21) உதவி ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் காவலர்கள் அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, ஆலயத்தின் அருகேயுள்ள மைதானத்தில் இளைஞர்கள் சிலர் தகுந்த இடைவெளியின்றி நின்றனர்.

இதனால் தொற்றுப் பரவும் அபாயம் இருப்பதால் வீட்டிற்குச் செல்ல அறிவுறுத்திய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் உதவி ஆய்வாளர் கதிரேசனைத் தாக்கினர். உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், இளைஞர்களை விசாரிக்கவே அங்குச் சென்றோம்’ என்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் உத்தரவின் பேரில், வள்ளியூர் ஆய்வாளர் சுரேஷ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details