திருநெல்வேலி: தமிழகத்தின் வற்றாத ஜீவ நதி என்று அழைக்கப்படுகிறது தாமிரபரணி ஆறு. அதனைச் சார்ந்து பாளையங்கால்வாய், கோடை மேலழகியான் கால்வாய், நெல்லை கால்வாய், கோடகன் கால்வாய் உட்பட பல்வேறு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய்கள் மூலம் தாமிரபரணி ஆற்றிலிருந்து விவசாய தேவைகளுக்காகத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
அதே சமயம் கடந்த பல ஆண்டுகளாக நெல்லையில் மேற்கண்ட கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. குறிப்பாக மாநகரைத் தழுவிச் செல்லும் பாளையங்கால்வாய் முழுமையாகப் பராமரிப்பில்லாததால் தற்போது கழிவுநீர் ஓடையாக மாறி உள்ளது. மேலும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் அனைத்து விதமான கழிவுகளும் பாளையங்கால்வாயில் கலக்கிறது. வீட்டுக் கழிவுகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற மாநகராட்சி சார்பில் சரியான திட்டம் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம்! முறையான சிகிச்சை அளிக்காததால் தாய், சேய் இருவரும் உயிரிழப்பு..!
ஆரம்பத்தில் நெல்லை மாநகர மக்கள் விவசாய தேவைகளுக்கும், குடிநீர்த் தேவை மற்றும் குளிப்பதற்கும் இந்த பாளையங்கால்வையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சாக்கடையாக மாறியுள்ள பாளையங்கால்வாயை சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பாளையங்கால்வாயை சீரமைக்கக் கோரி சிராஜ் என்ற இளைஞர் சைக்கிளில் வந்து மாநகராட்சி மேயர் சரவணனிடம் மனு அளித்தார்.