நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து நெல்லை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து ஏழு பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் பகவதி (27). சமையல் பணி செய்துவரும் இவர், வள்ளியூரில் தனது தாய், சகோதரியுடன் வசித்துவந்தார். இந்நிலையில் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி சாப்பிடுவதற்காக வள்ளியூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைக்கு வந்துள்ளார்.
ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை அப்போது அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களான முத்துப்பாண்டி, முத்துகிருஷ்ணன், ஐயப்பன், சுரேஷ், கணேசன், சிவா, சுல்தான் உள்ளிட்ட ஏழு பேர் பகவதியை ஆம்னி வேனில் கடத்திச் சென்று ரயில் நிலையம் அருகே தன்பால் உறவுக்கு வற்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் பகவதியை அடித்துக் கொலை செய்துவிட்டனர்.
இது குறித்து வள்ளியூர் காவல் துறையினர் ஏழு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த் குற்றவாளிகள் ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து ஏழு பேரையும் காவல் துறையினர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.