திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஏ.ஆர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (46). இவர் மகாராஜா நகர் உழவர் சந்தை அருகேவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மகாராஜநகரைச் சேர்ந்த இசக்கி (29) என்பவர் நேற்றிரவு ஜெயக்குமார் பணிபுரியும் டாஸ்மாக் கடையில் இரவு நேரம் மது வாங்கச் சென்றுள்ளார்.
ஆனால், பணம் கொடுக்காமல் இசக்கி கடன் கேட்டதாக தெரிகிறது. கடன் கிடையாது என ஜெயக்குமார் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இசக்கி 2000 ரூபாய் நோட்டை கொடுத்து மது வாங்கி விட்டு விற்பனையாளர் ஜெயக்குமாரின் செல்போனையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
செல்போனை திரும்பப் பெறுவதற்காக கடைக்கு வெளியே வந்தபோது மீண்டும் வாக்குதம் ஏற்பட்டவே ஆத்திரத்தில் இசக்கி கையில் இருந்த பீர் பாட்டிலால் விற்பனையாளர் ஜெயக்குமாரை தாக்கினார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் நிலைதடுமாறி சரிந்த விழுந்தார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெருமாள்புரம் காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை கைது செய்தனர்.
இதையும் படிங்க:குடிபோதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய மதுப்பிரியர்கள் - சிசிடிவி வெளியீடு