நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளியான இவரது மகன் விஷால் சந்தோஷ்குமார் (18) 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வந்துள்ளார். இந்த சூழலில் சிறுவயதிலேயே விஷால் சந்தோஷ்குமாரின் வாழ்க்கையில் விதி விளையாட தொடங்கியது. 2019ஆம் ஆண்டு விஷால் சந்திரகுமாரின் இடது கால் மூட்டுப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முருகன் தனது மகனை நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, விஷால் சந்தோஷ் குமாருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்து மூட்டுப் பகுதியில் உள்ள கட்டியை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்படி முருகன் கேட்டுள்ளார். ஆனால் சில காரணங்களை காட்டி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர்கள் சரிவர சிகிச்சையை தொடங்காததால் தற்போது விஷால் சந்தோஷ்குமாருக்கு கால் முழுவதும் புற்றுநோய் கட்டி பரவியிருப்பது சமீபத்தில் எடுத்த ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் பதறிப்போன முருகன் மீண்டும் மருத்துவர்களை அணுகி, எனது மகன் சிகிச்சைக்கு என்னதான் வழி என்று கேட்டபோது, கால் முழுவதும் பரவி இருப்பதால் காலை வெட்டிதான் எடுக்க வேண்டும், அப்படி எடுத்தால்கூட சிறுவன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கை விரித்துள்ளனர். அதேசமயம் காலை வெட்டி எடுக்கவேண்டும் என்று கூறி ஆறு மாதங்கள் ஆன நிலையில், தற்போதுவரை அதற்கும் அரசு மருத்துவர்கள் எந்த இசைவும் கொடுக்காமல் இருப்பதாக முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.