நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூத்த மகன் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் காவல் துறையினர் அடிக்கடி அவரைத் தேடி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக அவரது 27 வயதான தங்கையை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் காவல் துறையினர் ஓராண்டாக வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூலித் தொழிலாளி மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, நிச்சயம் செய்தார்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த வாரம் நெல்லை சீதற்பநல்லூர் காவலர்கள், நிலுவையிலுள்ள ஒரு வழக்கு விசாரணைக்காக மீண்டும் அவரது வீட்டிற்கு சென்றுள்னர்.
இதைக் கேள்விப்பட்டு மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மன உழைச்சல் அடைந்த மகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அளவுக்கு அதிகமாக விஷம் அருந்தியதால் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையினரின் நடவடிக்கையால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் இந்த நிலையில் அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், "எங்கள் வீட்டிற்கு அடிக்கடி காவலர்கள் வந்து சென்றனர். இதனால் எனக்கு நிச்சயம் செய்து வைத்திருந்த மாப்பிள்ளை என்னை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். இதே போல் அடிக்கடி திருமணம் தடைபட்டால் நான் என்ன செய்வேன்" எனப் பேசியுள்ளார்.
இதற்கிடையில் நெல்லை அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் அவர் தரையில் படுத்து சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலர் பத்திரிக்கையாளர்களிடம் கூறிவரும் நிலையில், நெல்லையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் தரையில் படுத்தபடி சிகிச்சை பெற்று வரும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடிதடி, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டர் சட்டம்!