திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது ஆளும் கட்சி கவுன்சிலர்களே தொடர்ச்சியாக மாமன்ற கூட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். அதாவது நெல்லை திமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசல் காரணமாக முன்னாள் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மேயர் மீது குற்றம் சாட்டி வந்தனர். பின்னர் உட்கட்சி பூசல் காரணமாக மாஜி மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், சமீபத்தில் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதன் பிறகு மேயர் மீது குற்றம் சாட்டுவதை ஆளும் கட்சி கவுன்சிலர்கள் தவிர்த்துள்ளனர். அதேநேரம், கவுன்சிலரால் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட மேயரை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் நம்பிக்குமார் என்பவர் நெல்லை மாநகரப் பகுதியில் தொடர்ச்சியாக போஸ்டர் ஒட்டி வருகிறார். அந்த போஸ்டரில் ‘கமிஷன் வாங்கி கல்லா கட்ட துடிக்கும் மேயரை மாற்ற வேண்டும்’ என பரபரப்பு வசனங்களையும் குறிப்பிட்டு இருந்தது மேலும் பதற்றத்தைக் கூட்டியது.
தங்கள் கட்சி கவுன்சிலர்களை சமாளித்த மேயர், அடுத்த கட்டமாக நம்பிக்குமாரை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், மேயரை மாற்றக்கோரி நம்பிக்குமார் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா சிலையிடம் கடந்த வாரம் மனு அளிக்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால், போலீசார் அவரது போராட்டத்திற்கு தடை விதித்தனர். இதனையடுத்து, நேற்று மீண்டும் அண்ணா சிலையிடம் மனு அளிக்கப் போவதாக நம்பிக்குமார், 100க்கும் மேற்பட்ட பெண்களை திரட்டிக் கொண்டு, மாநகராட்சி அலுவலகம் வந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அண்ணா சிலையிடம் மனு அளிக்க அனுமதி கிடையாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றோரிடம் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து போலீசாரிடம் நம்பிக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.