நெல்லை அருகே அடைமிதிப்பான் குளம் பகுதியில் தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் நாங்குநேரி அருகே காக்கைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன், இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன், நாட்டார்குளத்தைச் சேர்ந்த விஜய், ஆயன் குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய 6 பேர் பாறை இடிபாட்டில் சிக்கிக்கொண்டனர்.
விபத்தில் சிக்கி லேசான காயமடைந்த விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன், விஜய் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாறை சரிந்து விழுந்து பொக்லைன் இயந்திரத்தில் சிக்கிய செல்வம் என்பவர் நேற்று மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கல்குவாரியில் சிக்கிய மேலும் 3 பேரை தேசியப் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் முகாமிட்டுத் தேடி வருகின்றனர்.