திருநெல்வேலி:நெல்லை டவுண் காவல்பிறை தெருவைச் சேர்ந்தவர், அருண்மணி. இவர் இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாளையங்கோட்டையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வண்ணாரப்பேட்டை அருகே வந்தபோது தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து, அருண்மணியன் இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுபோல் 2 முறை மோதுவதுபோல் பேருந்து இயக்கப்பட்டதால் அச்சமடைந்த அருண்மணி, அந்த பேருந்தின் குறுக்கே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, வண்டியை அதிவேகமாக ஓட்டிய ஓட்டுநரிடம் அருண்மணி குடும்பத்தினர் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, அருண்மணியின் மனைவி காயத்ரி, அதிவேகமாக பேருந்து ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது, “இரண்டு பச்சைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு வாகனத்தில் செல்கிறோம். ஏதாவது விபரீதம் நடந்திருந்தால் எங்கள் குழந்தைகளுக்கு யார் பதில் சொல்வது?” என கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய ஓட்டுநர் தெரியாமல் நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறவே, மேலும் ஆத்திரமடைந்த காயத்ரி, “எங்களுக்கு எதாவது நடந்திருந்தால், உங்கள் மன்னிப்பை வைத்து எனது குழந்தைகளுக்கு அப்பா அம்மாவை கொடுக்க முடியுமா? ஒரு உயிரை திருப்பிக் கொடுக்க முடியுமா?” என்று கடும் கோபத்தோடு கேள்வி எழுப்பினார்.