திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்த சகுந்தலாவின் இளைய மகன் பிரதீப் மீது போக்சோ வழக்கு உள்ள நிலையில், தற்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் சகுந்தலாவின் மூத்த மகன் பிரசாந்த்தையும் கைது செய்ய இன்று (நவ.24) காலை சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் குமாரி சித்ரா தலைமையிலான காவல் துறையினர் அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது சகுந்தலா, காரணமின்றி தனது மகன்களைக் கைது செய்வதாகக் குற்றஞ்சாட்டி, கைது செய்ய விடாமல் தடுத்துள்ளார். அப்போது அவரை காவல் துறையினர் தரக்குறைவாக திட்டியதாகக் கூறப்படுகிறது.
அதனால் அவர், காவல் ஆய்வாளர் முன்னிலையில் வீட்டுக்குள் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் காவலர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சகுந்தலா மீது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மணிவண்ணன் வழக்கை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். நாளை (நவ.25) முதல் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
இதையும் படிங்க:காதலித்து ஏமாற்றிய காவலர் - 17 வயது சிறுமி தீக்குளிப்பு!