திருநெல்வேலி:மணிமுத்தாறு அருகே உள்ள வைராவி குளம் பகுதியை சேர்ந்தவர், வள்ளியம்மை(70). கணவனை இழந்த மூதாட்டியான இவருக்கு சொந்தமாக வைராவி பகுதியில் விவசாய நிலம் உள்ளதாக தெரிகிறது. மூதாட்டி தனது மகள் அரசு வேலை பெறுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த நபர்கள் தற்போது தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதோடு நிலத்தை எழுதி தர வற்புறுத்துவதாக மூதாட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த 'மக்கள் குறைதீர்க்கும் நாள்' கூட்டத்தில் தனது பிரச்னை குறித்து மனு அளிப்பதற்காக வள்ளியம்மை வந்தார். ஆட்சியரை சந்தித்து மனு அளித்துவிட்டு மனு வாங்கும் அரங்கிற்கு வெளியே வந்தபோது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி மூதாட்டி வள்ளியம்மை தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.
அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் பாளையங்கோட்டை போலீசார் தற்கொலை முயற்சி செய்தது குறித்து மூதாட்டி வள்ளியம்மையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வயதான காலத்தில் தேவை இல்லாமல் இதுபோன்று, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்யலாமா? என போலீசார் கேட்டுள்ளனர்.