திருநெல்வேலி:பொன்னாக்குடி பகுதியில் வசிப்பவர், ஏஞ்சல் மரிய பாக்கியம். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது கணவன் தன்னுடன் நடந்த திருமணத்தை மறைத்து மேலும் இரு பெண்களுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அந்த மனுவில் கூறியதன்படி, 'ஏஞ்சல் மரிய பாக்கியத்திற்கும், குரும்பூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு அபிஷா, அஜிதா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவர் முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் இருந்து வரதட்சணை பணமும் கேட்டு துன்புறுத்திய நிலையில், அவர் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், முத்துக்குமாரின் குடும்பம் சமாதானம் சொல்லி அழைத்துச் சென்ற நிலையிலும் ஏஞ்சல் மரியபாக்கியத்தை மீண்டும் கொடுமைபடுத்தத் தொடங்கியுள்ளனர். துன்புறுத்தல் அதிகமானதும் தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டார் ஏஞ்சல் மரிய பாக்கியம்.
குரும்பூர் காவல் நிலையத்தில் 104/15, CC-55515 வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏஞ்சல் மரிய பாக்கியம், தனது திருமணத்திற்குத் தாய் வீட்டில் அளித்த 12 சவரன் நகையை மகள்களின் கல்வித்தொகைக்கு உதவியாக கேட்டுள்ளார்.
அதனையும் கணவர் முத்துக்குமார் தர மறுத்ததால் இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவிற்கும், தனது வாழ்வாதாரத்திற்கும் DVC 2/2017 என்ற வழக்கினை தாக்கல் செய்து, அந்த வழக்கின் தீர்ப்பு 30.11.2020ஆம் தேதியில் மாத செலவுத் தொகையாக ரூ.9000 மற்றும் ஒவ்வொரு மாதமும் மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் தரும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் படி மாத பராமரிப்புச் செலவு தொகையினை வழங்காதால் மீண்டும் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.