நெல்லையப்பா் கோயிலில் வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை திருநெல்வேலி:ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அல்லது ஆவணி மாத கடைசி வெள்ளி நாளன்றும், பௌர்ணமி நாளுக்கு முன்வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி நோன்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செல்வங்களுக்கு மகாதிபதியாக திகழக்கூடிய லட்சுமி தேவியை இந்நாளில் சுமங்கலிப் பெண்கள் நாள் முழுதும் விரதமிருந்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு திரு அவதாரங்களாக வடிவுற்ற மகாலட்சுமி எட்டு வகை செல்வங்களை அளிப்பவளாகத் திகழ்கிறாள். வரலட்சுமி பூஜையை பொதுவாகத் திருமண முடிந்த பெண்கள் கணவரின் ஆயுள், குழந்தைகளின் நலன், செல்வம் பெருக, விரதம் இருந்து பூஜை செய்வர்.
வரலட்சுமி நோன்பு குறித்த புராணக் கதைகள்:தேவகுல பெண் நீதிபதியாக இருந்த சித்திரநேமி, தேவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கி வருகிறாள். இவ்வாறு ஒருமுறை அவள் நடுநிலை தவரி பாரபட்சமாக நடந்துகொள்ள, தாயாள் பார்வதி அவளுக்கு குஷ்டரோகியாகும்படி சாபம் விடுகிறாள். சாப விமோசனம் கேட்டு தாயாள் பார்வதியிடம் வேண்ட, பூமியில் கடைப்பிடிக்கப்படும் வரலட்சுமி நோன்பை கடைப்பிடித்தால் சாபத்திலிருந்து விமோசனம் எனக் கூற, பூலோகம் வந்து குளக்கரை ஒன்றில் அமர்ந்து நோன்பிருந்து சாபவிமோசனம் பெறுகிறாள்.
தொடர்ந்து, மகத நாட்டை செல்வச் செழிப்பாக ஆளும் ராணி சுசந்திரா, நாட்டின் வளத்தால் மகாலட்சுமியை அவமதிக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி செழிப்புகள் எல்லாம் அழியச் செய்கிறாள். உணவுக்குக் கூட கஷ்டப்படும் நிலையில் தவித்த மகத நாட்டின் சுசந்திரா தன் மகளின் மூலம் அறியப்பட்ட வரலட்சுமி நோன்பை மேற்கொள்கிறாள். இதனால் மனம் குளிர்ந்த மகாலட்சுமி தாயார் அவளுக்கு மீண்டும் செல்வங்கள் வழங்கி அருள் வழிசெய்கிறார்.
மகாலட்சுமியின் மனம் குளிர்வித்தால் நன்மைகள் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றது. இதனையொட்டிய பெண்கள் தங்கள் குடும்பங்களின் நலன் மற்றும் செழிப்பு கருதி வரலட்சுமி நோன்பு மேற்கொள்கின்றனர்.
வரலட்சுமி நோன்பு மேற்கொள்ளப்படும் முறைகள்:வீட்டின் கிழக்கு திசையில், தட்டில் அரிசி அல்லது நெல் கொட்டி, கும்பத்தில் தீர்த்தம் நிரப்பி வைத்து, தேங்காய், மஞ்சள், குங்குமம், பொட்டிட்டு, புதிய வஸ்திரம் போர்த்தி ஒன்பது அஷ்ட தேவதைகளையும் வணங்கும்படி மஞ்சள் கயிறு சுற்றி ஒன்பது முடிச்சுகள் போடப்படும். பூஜை தடைப்படக் கூடாத என்ற எண்ணத்தில் சந்தனத்தில் விநாயகர் சிலை பிடித்து வைத்து அருகப்புல், வெற்றிலைகளால் நிறைத்து பல்வேறு கனி வகைகளுடன், அப்பம் போன்ற பலகாரங்களுடன் லட்சுமி தேவிக்கு ஆரத்தி காட்டி வேதங்கள் உறைத்து பூஜைகள் செய்வது வழக்கம். பூஜையில் கொடுக்கப்படும் மஞ்சள் கயிறுகளைப் பெண்கள் அணிந்து கொள்வர்.
இந்த நோன்பை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இன்று வரலட்சுமி நோன்பு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 சுமங்கலிகள் கலந்து கொண்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது. பெண்கள் மாங்கல்ய பலன் அமையவும் , குழந்தைப்பேறு கிடைக்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருணம் நடைபெறவும், இல்லங்களில் சுப காரியங்கள் நடைபெறப் பக்தர்களால் வரலட்சுமி பூஜை நடைபெற்ற வருகிறது.
ஆயிரங்கால் மண்டபத்தில் அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருள, சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுமங்கலிப் பெண்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு அர்ச்சனை செய்து சுமங்கலி பூஜை வேதங்கள் சொல்லப்பட்டு வழிபாட்டு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிந்தும், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களுடன் வழிபாடு நடத்தினர். நிறைவாகச் சுவாமி மற்றும் அம்பாளுக்கு மங்கல ஆரத்தி காண்பிக்கப்பட்டு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மங்கலப்பொருட்களான குங்குமம், மஞ்சள், வளையல், மாங்கல்ய கயிறு உள்ளிட்வைகளுடன் பிரசாந்தங்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு - ரூ. 2 கோடி அளவிற்கு காணிக்கைகளை வாரி வழங்கிய பக்தர்கள்!