நெல்லை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது. குறிப்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து தொடர்ச்சியாக தனது படங்களில் காட்சிப்படுத்தி வருகிறார்.
எனவே பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் வரிசையில் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படமும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. அதே போல் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே, அவரது நடிப்பைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
அதேசமயம் நடிகர் கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தைக் குறிப்பிட்டு, அந்தப் படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கதாபாத்திரம் தான் இப்படத்தில் மாமன்னன் கதாபாத்திரம் என இயக்குநர் மாரி செல்வராஜ் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசினார். மேலும் தேவர் மகன் படம் தனது சிறு வயதில் மனதில் வலியை ஏற்படுத்தியதாக அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாமன்னன் திரைப்படத்திற்குத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.