நெல்லையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கிய மழை திருநெல்வேலி: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை உட்பட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இருப்பினும், திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றூவட்டார் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால், திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதிகளான பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, மகாராஜா நகர், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன், பேட்டை போன்ற மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்த கன மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதையும் படிங்க:கோவையில் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய பாலங்கள் - வாகன ஓட்டிகள் அவதி!
குறிப்பாக, வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே மழைநீர் தேங்கியதால், சாலைகளில் இருக்கும் பள்ளங்கள் தெரியாமல் போனது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும், தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தொடர் கனமழை காரணமாக, சில பகுதிகளில் பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர், மழை குறையவே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
மேலும், இந்த தொடர் மழையால் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருக்கும் நீர் நிலைகளின் நீர்வரத்து உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் ஒரு நாள் இரவு பெய்த கனமழைக்கே, ஆற்றோரம் உள்ள பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், ஒரு இரவு மழைக்கே நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளின் சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது, மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க:கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க 37வது நாளாக தொடரும் தடை!