திருநெல்வேலி - கன்னியாகுமரி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நிலப்பாறை அணைக்கட்டிலிருந்து, ஆண்டு தோறும் குமரி மாவட்டத்திலுள்ள அணைகளிலிருந்து வரும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ராதாபுரம் பாசனத்திற்காக திறந்து விடப்படும்.
அதன்படி, கடந்த ஒரு வார காலமாக குமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் அதிக மழை பெய்ததால் அதிகளவு தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதனால், உபரி நீர் அதிகளவில் வீணாவதைத் தடுக்கும் வகையில், நிலப்பாறை அணைக்கட்டிற்குத் தண்ணீர் திருப்பப்பட்டு தேக்கி வைக்கப்பட்டது.
இதன்மூலம் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் சேமிக்கப்பட்டது. மேலும் உபரி நீர் வரத்து அதிகமாகவும் உள்ளது. எனவே இதனை ராதாபுரத்திலுள்ள 52 குளங்களுக்கு ராதாபுரம் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடக் கோரி சபாநாயகர் அப்பாவு, இரு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப்பணித் துறை நீர்ப்பாசன பிரிவு பொறியாளர்களிடம் தொடர்புக்கொண்டு பேசினார்.
மேலும் குமரி மாவட்டத்திலுள்ள இரு அணைகளிலிருந்தும் உபரி நீர் வெளியேறும் வரை ராதாபுரம் பாசனக்கால்வாயில் தண்ணீரைத் திறந்து விடவும் சபாநாயகர் அறிவுறுத்தினார். அதன்பேரில் நேற்று (மே.19) ராதாபுரம் பாசனக்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிலப்பாறை வந்தடைந்த நிலையில், 2 ஆயிரம் கனஅடி முதல் சுமார் 3 ஆயிரம் கனஅடி நிரம்பிய தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.