திருநெல்வேலி மாவட்டத்தின், பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய மூன்று அணைகளை நம்பி சுமார் 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த அணைகளிலிருந்து ஆண்டுதோறும் கார், பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சமீபத்தில் பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல், மணிமுத்தாறு அணையின் ஒன்று, இரண்டாவது கால்வாயிலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மணிமுத்தாறு அணையிலிருந்து இன்று(டிச.09) பிசான சாகுபடிக்காக மூன்று, நான்காம் கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்துகொண்டு மதகுகளை திறந்து வைத்தனர்.