தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் புது ஆற்றுப் பாலத்தில் இன்று (ஜனவரி 25) பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர், துணை ஆணையர் சரவணன், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் விழிப்புணர்வுக்காக வானில் பலூன்களை பறக்க விட்டனர். இதன் பின் முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் அலுவலர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அலுவலர்கள் பார்வையிட்டார். இதில் சேரன்மகாதேவி கவின்கலை குழுவைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள துணியில் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்தனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் சமீபத்தில்தான் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது ஆனால் அருகில் நடைபெறும் சாலை பணிகளுக்காக பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாத நிலையில் இன்று பாலம் முழுவதும் வாக்காளர் தின நிகழ்ச்சிகள் வண்ணமயமாக நடைபெற்றது.
துணியல் ஓவியம் வரையும் கலைஞர் நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூடுதல் வாக்கு மையங்கள் அமைக்கப்படுவதால் அதற்கு ஏற்ப கூடுதல் வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.
துணியல் ஓவியம் வரையும் கலைஞர்கள் கொக்கிரகுளம் - வண்ணாரப்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த புதிய ஆற்றுப் பாலம் விரைவில் திறந்தால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பயனாக இருக்கும். ஆனால் அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் சாலை பணிகள் துரிதமாக முடிக்கப்படாமல் பாலம் பயனற்றதாக இருக்கிறது. பல கோடியில் கட்டப்பட்ட இந்த புதிய பாலம் நிகழ்ச்சி அரங்கமாக மாறியிருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.