சூட்டிங் ஸ்பாட்டில் பழைய நினைவுகளைப் பகிர்ந்த நடிகர் ரஜினியின் வீடியோ வைரல் திருநெல்வேலி:ஜெயிலர் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 170 படத்தில் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல், ரஜினிகாந்தின் 170-வது படத்தை இயக்குகிறார். தற்போது வரை அந்தப் படத்திற்குப் பெயர் வைக்காமல், தலைவர் 170 என்ற பெயரில் சூட்டிங் தொடங்கியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த அக்.4-ஆம் தேதி, முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தயாரிக்கும் தொழில் கூடத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தபடி, தினமும் சூட்டிங்கில் கலந்து கொள்கிறார் எனக் கூறப்படுகிறது.
நேற்று (அக்.10) முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் காரில் வந்தபோது, சாலை ஓரம் கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து வணக்கம் வைத்தார். அதைத் தொடர்ந்து இன்று (அக்.11) நடைபெற்ற இரண்டாம் நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு கன்னியாகுமரி திரும்பியபோது, இன்றும் சாலை ஓரம் அவரைப் பார்ப்பதற்காக மணிக் கணக்கில் காத்து இருந்த ரசிகர்களை காரின் மேல்பகுதியில் நின்றபடி கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
இதற்கிடையில் ரஜினிகாந்த் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து, அங்கிருந்து நபர்களிடம் உரையாடும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கடைசியாக, 47 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை வந்திருந்தேன் என்று அவரது பழைய நினைவுகளைப் பகிர்ந்தது நெல்லை ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை அதிகரித்துள்ளது.
கடைசியாக, 'புவனா ஒரு கேள்விக்குறி' என்ற படப்பிடிப்பிற்காக 1977-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு ரஜினிகாந்த் வருகை தந்து இருந்தார். அதன் பிறகு தற்போது தான் படப்பிடிப்பிற்காக, அவர் நெல்லை வந்துள்ளார். நெல்லை வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவரது பழைய நினைவுகளைப் பகிரும் அந்த வீடியோவில் வெள்ளை நிற பேண்ட் மற்றும் பிரவுன் நிற சட்டை அணிந்தபடி, இளமையான தோற்றத்தில் காட்சியளித்தார். மேலும் தனது வலது கையில் 1980 (80's) காலகட்டங்களில் இளைஞர்கள் அவர்கள் கைகளில் அதிகளவில் விரும்பி அணியும் செம்பு காப்பு ஒன்றையும் அணிந்திருந்தார். நடிகர் ரஜினியின் இந்தத் தோற்றம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதாகப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:காரில் நின்றவாறு கையசைத்த ரஜினிகாந்த்.. நெல்லையில் ரசிகர்கள் உற்சாகம்!