லஞ்சம் கேட்ட நெல்லை சேர்மன் குறித்த ஆடியோ திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி,மேலப்பாளையம், தச்சநல்லூர், பாளையங்கோட்டை என மொத்தம் நான்கு மண்டலங்கள் உள்ளன. இதில் மேலப்பாளையம் மண்டல சேர்மனாக பெண் கவுன்சிலர் இக்லாம் பாசிலா இருந்து வருகிறார். இவர் மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் துபை சாகுலின் மகள் ஆவார்.
இந்நிலையில் வீட்டுத் தீர்வை போடுவதற்கு மண்டல சேர்மன் இக்லாம் பாசிலா, ஆசிரியர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக திமுக நிர்வாகி ராபர்ட் என்பவர் மண்டல சேர்மனின் தந்தை துபை சாகுலிடம் புலம்பும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் இருவரது உரையாடல் தொடங்கும்போதே மண்டலச் சேர்மனின் தந்தை துபை சாகுல், ராபர்ட் அந்த நிகழ்ச்சிக்கு தர வேண்டிய பணம் இன்னும் வரவில்லையே என்று வசூல் நோக்குடன் தனது உரையை தொடங்குகிறார். அதற்கு திமுக நிர்வாகி ராபர்ட், “நம்முடன் எல்லா கட்சி நிகழ்ச்சிக்கும் வரும் வாத்தியார் ஒருவர் வீட்டு தீர்வை கேட்டு உங்கள் மகளை தொடர்பு கொண்டபோது 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். கேட்டதற்கு ஏஆர்ஓவுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்.
இப்பதான் உங்க ஆபீசில் வைத்து பத்தாயிரம் கவர் வைத்து கொடுத்து விட்டு வந்தேன், இது தவறு. கட்சிக்காரர் எதற்கு சேர்மனாக இருக்க வேண்டும். அதிமுக இருந்தால் கூட ஐந்தாயிரம் ரூபாயில் முடிந்து விடும். அங்கே உட்கார்ந்து கொண்டு வசூல் செய்து கொண்டிருக்கிறீர்களா?. நாம் எப்படி கட்டிப்பிடித்து பழகினோம், வாத்தியாரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு டார்ச்சர் செய்தால் என்ன அர்த்தம். பேசாமல் சேர்மன் போர்டை எடுத்து விட்டு வசூலிப்பவர் என்று போர்டு வைக்க சொல்லுங்கள்.
உங்கள் மகள் முப்பதாயிரம் பணம் கேட்டது உண்மையா? பொய்யா? என்பதை குர்ஆன் வைத்து சத்தியம் செய்து விடுவோம். நான் கட்சியில் இருந்து என்ன பலன். வீட்டு தீர்வைக்கு 30ஆயிரம் லட்சம் கேட்டால் எப்படி? நான் உங்கள் மகளை சின்ன பொண்ணு என்று நினைத்தேன். விவரமான ஆளா தான் இருக்காங்க, நீங்கள் செய்கிற கூத்து அப்படி இருக்கிறது” என்று வேதனையுடன் திமுக நிர்வாகி ராபர்ட் தனது உரையாடலை முடிக்கிறார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாக வருகிறது. ஏற்கனவே நெல்லை மாநகராட்சியில் உள்கட்சி பிரச்னையால் மேயர் மற்றும் கவுன்சிலர்களிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல் சாலை, கழிவுநீர், கால்வாய் உள்பட பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் வீட்டு தீர்வை வழங்க மண்டல சேர்மன் 30ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக ஆளுங்கட்சி நிர்வாகி வெளியிட்டுள்ள ஆடியோ மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பெண்மணியை அரிவாளால் தாக்கி நகை, பணம் கொள்ளை - இருவர் கைது!