திருநெல்வேலி:தமிழ்நாடு காவல்துறையில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காவல்துறை, காவலர்களிடையே மன அழுத்தத்தைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், தற்கொலை சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறிவருகிறது.
அண்மையில் புதிதாகப் பொறுப்பேற்ற டிஜிபி சைலேந்திரபாபு காவலர்கள் வாரம் ஒருமுறை விடுமுறை எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். இருப்பினும் பல்வேறு காவல் நிலையங்களில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
காவலர் மன அழுத்தம்
இந்த சூழ்நிலையில் பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் அருணாசலம் என்பவர், காவல் துறையில் நடக்கும் சம்பவங்களால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, தான் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக உருக்கமாக ஆடியோ ஒன்றில் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், "நான் சிறுவயதிலிருந்தே காவல் பணியை மட்டும் நேசித்து வந்ததால், வேறு எந்த பணிக்கும் செல்ல விரும்பாமல் 2002ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலரானேன். இதையடுத்து 2011ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராகவும் தேர்ச்சி பெற்றேன். நான் பணிபுரிந்த இடங்களிலெல்லாம் மரியாதை மதிப்பும் பெற்றவன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்த போது ஓய்வு நேரம் மிகக் குறைவாக இருந்தபோதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்தேன். எனது உடல் பலவீனம், கவலைகள் மறந்தேன். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக திருநெல்வேலி மாநகரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறேன்.