திருநெல்வேலி:பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிருபா நகரில் வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிப்பு கூடம் அமைத்து, சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளை சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் விநாயகர் சிலை வாங்க ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.
சிலை தயாரிப்புக் கூடத்திற்கு சீல்:கடந்த சில தினங்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பாளையங்கோட்டை கிருபாநகர் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து மாதிரிகள் சேகரித்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில் இரசாயன கலப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. வருவாய் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்புக் கூடத்தை இரும்பு தகடுகள் கொண்டு பூட்டி சீல் வைத்தனர்.
விற்பனை செய்ய தடை இல்லை: இந்த நிலையில் இந்து முன்னணி பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த மூன்று தினங்களாக போராட்டம் நடத்திய நிலையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபடும் வட மாநில தொழிலாளர் பிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கில் சிலைகளை விற்பனை செய்ய தடை இல்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிலை தர மறுப்பு:இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் நேற்றிரவு சிலைகளை பெற்றுக் கொள்வதற்காக பாளையங்கோட்டை பகுதிக்குச் சென்று உயர் நீதிமன்ற உத்தரவை காட்டியும் காவல் துறையினர் சிலைகளை கொடுக்க மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வருவாய் துறையினர் தான் சிலைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், காவல் துறையினர் பாதுகாப்பு மட்டுமே வழங்குகிறார்கள் என்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வருவாய் துறை அதிகாரிகள் வர காலதாமதம் ஆன நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி, நீதிமன்ற உத்தரவை காட்டி சிலைகளை எடுத்துச் செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து வருவாய் துறையினர் அங்கு வந்தனர். அப்போது நீதிமன்ற உத்தரவை காட்டி சிலைகளை எடுக்க முயற்சித்தனர். இருப்பினும் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தொடர்ந்து போராட்டம் நீடித்து வந்தது.